Tuesday, 27 December 2011

 மனிதர் முகம் தெரியும் பொழுது
மனம் அதிர்கிறது
ஏன் நினைக்கவில்லை
எது கண்ணை மறைத்தது

முட்கள் இருக்கின்றன 
 மலர்கள் இருக்கின்றன 
ஒன்றை வேறொன்றாக பார்த்தால்
பார்வையில் தான் கோளாறு 

தவறொன்றும் செய்யவில்லை
ஏன் இந்த அபகரிப்பு 
எப்படி நிகழ்ந்தது 
அர்த்தமற்ற கேள்விகள் 


நியாயம் நம்பிக்கை . . . நேசம் 
வழக்கொழிந்த வார்த்தைகள் 
எந்த உலகில் இருக்கிறாய் நீ 
விழித்துக்கொள்  

Thursday, 15 December 2011

என்னவாயிற்று



பசி எடுக்கிறது பரபரவென்று
பிடித்ததை எல்லாம்  எடுத்த கணமே
ருசிக்கவில்லை பசியும் இல்லை


இனிய ஓசை தொலைவில் கேட்கிறது
இசையில் மனதை நிலை நிறுத்தினால்
திமிரும் குதிரையாய் அலைபாய்கிறது


விடிந்தும் விடியா வைகறைப் பொழுதில்
மலைச் சாரலில் மெதுவாய் நடந்தால்
படுக்கையின் சுகமே நிழலாடுகிறது


தொலைதூர இரயிலின் குரலோ
சலசலக்கும் ஆற்றின் ஒலியோ
பிறிதொரு சப்தமாய் தெரிவேதேனோ


காலம் கரைகிறது கற்பூரமாய்
கையில் பிடித்து நிறுத்தப் பார்த்தால்
உள்ளங்கையில் ஒன்றுமில்லை



என்னவாயிற்று எனக்கு என்று
இரு கண் மூடி யோசித்தால்
வயதாகிவிட்டது, ஆம் வயதாகிவிட்டது.




Monday, 12 December 2011


சுந்தர மஹால் 


கால்கள் தயங்கின வாசலைத்  தாண்ட

காலச் சுவடுகள் அதிகமில்லை,
சிறிதே கலைந்த ஓவியமாக,
அருமை வீடு அமர்ந்திருந்தது

நான்கு வாசல் திறந்த முற்றம்
ஓடி ஆடித் திரிந்த தோட்டம்
தளும்பி நின்ற கிணற்று நீர்
மாட்டுக் காடி ட்டுக் கூரை
புல் வெளிகளும் மொட்டை மாடியும்
வானுயர்ந்த வேப்ப மரங்களும் 
அப்படியே அப்படியே அப்படியே இருந்தன

சின்னண்ணா அறையும், பெரியண்ணா அறையும்
ஆனந்த விகடன் காலண்டர் பார்த்து
நான் வரையத்துவங்கிய என் குட்டி அறையும்
செல்லத் தம்பி தொட்டில் ஆட
மாம்மா படுக்கும் பலா அடைப்பும்

மாறா ஜன்னல் கம்பிகள் வழியே
சுவற்றின்  பின்னால் நிழலாடின
நல்ல வேளை உரியவர் இல்லை
என்ன இங்கே என்று கேட்க

ஐம்பது ஆண்டுகள் கழன்று சிதற
விதிர்த்து நின்றேன் கால்கள் பின்ன

கை மாறிய கணங்கள் மின்ன
இன்று இல்லாதவை இரண்டென உணர்ந்தேன்

அம்மாவின் கனிவும் அப்பாவின் அணைப்பும்
மறைந்த வாதா மரங்களாக

நினைவில் மட்டும்  . . . .
நிரந்தர வலியாய்

Saturday, 10 December 2011




மேகப்பொதியாய் மலையை வருடி 
பன்னீர்த் துளியாய் மண்ணில் உதிர்ந்து
உள்ளங்காலை சில்லென நனைத்து  
காரையாராய்ப் பிறந்த ஓடை 

முண்டந்துறையின் முகப்பில் பாயும் 
சேர்வலாற்றின் கரம் பிடித்து
பாபநாச சிவனைச் சுற்றும் 
பளிங்கு நீராம் தாமிரபரணி.

பொங்கிப்பெருகும் காவிரி வேண்டாம்
ஆழ்ந்த அகண்ட கங்கை வேண்டாம்

கூழாம் கற்களைத்  தழுவி ஓடும் 
மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆறே

ஆறெனத்தோன்றும்
என்றும் எனக்கு