Wednesday, 5 December 2012

அலைக்குமிழ்

உறவுகள் விளிம்பில் நிற்கின்றன. 

அவ்வாறே இருக்கட்டும் 

நெருக்கம் தவிர் இறுக்கம் தவிர் 
மெல்லிய சிறு சிறு வலை பின்னி 
அதனுள் அமர்ந்துகொள் 
ஒரு சிலர், வெகு சிலர் உடனிருந்தால் போதும் 

நிற்க 
 வலையும் ஒருநாள் அவிழும் 
காற்றினில் கரையும் 
அலைக்குமிழ் வெடித்து 
ஆழ்கடல் புகும்  

நேரம் 

இது ஒரு நல்ல சேலை என்று 
விரல்களால் நீவிவிட்டு 
திருப்தியாக மடித்து வைப்பது போல் 

இது ஒரு நல்ல நட்பு 
என்று சில கணங்களை மனதில் நிறுத்தி 
சிலாகிப்பது போல் 

இது ஒரு நல்ல பாடல் என்று 
வரிகளை மனதில் ஒட்டி
ரசித்து மகிழ்வது போல் 

இது ஒரு நல்ல வாழ்க்கை என்று 
விலகி நின்று பார்க்கும் 
நேரம் நெருங்கி விட்டது 






Sunday, 25 November 2012


அறிவாயா சொல்

நாட்கள் நீள்கின்றன தேவையின்றி 
தனிமையின் சாரம் ஊறி, அவை அர்த்தமற்று போனால்
அதற்கு நீயே பொறுப்பு

காலம் எனும் காற்றில் அவை
பொல பொலவென்று உதிர்ந்து, மக்கி மடிந்தால் 
அதற்கும் நீயே பொறுப்பு

ஒவ்வொரு விடியலையும் விரைந்து ஏற்றுக் கொள் 
அது உன் கடைசி விடியலாகவும் இருக்கலாம்
ஒவ்வொரு இரவும் நித்திரையை ஆரத்தழுவிக் கொள்
அது ஒரு பெருந்தூக்கத்திற்கு ஒத்திகையாக அமையலாம்

சிறு தூறல் மண்வாசமும் சிறகு விரிக்கும் பருந்தின் ஒய்யாரமும் 
வெண் மொட்டு காளானின் எதிர்பாரா வரவும்
உள்மனதில் பொத்தி பதித்துக் கொள் 
இவற்றை நீ இன்னொரு யுகத்தில் சந்திக்க நேரலாம்

யாருக்குத்தெரியும் 
நீயும் நானும் கூட இதே வாழ்வை மறுபடி வாழநேரலாம்
நீ நன்கு அறிவாயா சொல்,
நிகழ், எதிர், கடந்த காலங்களின் வரிசை?

Sunday, 12 August 2012

As everything else


Please let me be
Am hurting 
in a steady sort of way

Can't be patched up
Nor glossed over
The tear is ragged and sharp

Maybe time will heal 
If ever
With sinews of memory 

Meanwhile
Listen
to the receding footfalls

Fading away
in the distance
As everything else

Monday, 14 May 2012

ஏன் இப்படி

எங்கள் பன்னீர் மரம் தென்னை மரங்களை விட உயரமானது 
நெடு நெடுவென்று இன்று நிமிர்ந்து நிற்கிறது 
வீடு கட்டியவுடன் வைத்த  கன்று 

நான்கடி உயரமே இருக்கும்பொழுது இடுப்பு முறிந்து 
காலுறை வைத்து என் மக்கள் இறுக்கி கட்டியதால் 
மீண்டும் வளர்ந்து 
இன்று பெய் மழை போல் பூக்களை பொழிகிறது 
தெருவிலும் தன கரங்களை நீட்டி வெண்கம்பளம் விரிக்கிறது 

பொத்தி பாதுகாக்கும் சரக்கொன்றை மரமோ 
கை தொடும் உயரத்தில் நின்று நகைக்கிறது 
வாடி வதங்கி பின் தளிர் விட்டு மறுபடியும் 
வாடி வதங்கி சின்னஞ்சிறு முளை விட்டு . . .

இரு மரங்களும்  ஒரே வருடம் வைத்தது தான் 
ஏன் இப்படி என்று யோசிக்கிறேன் 

Thursday, 19 April 2012

போகும் இடம் அப்படி

தேடித் தேடி அலைகிறேன் 
ஒரு நல்ல பெட்டி வேண்டுமென்று

ரோலர் பெட்டி பல உ ண்டு,என்னிடம்
சாம்பல். கரு நீலம், ஆழ்ந்த கருப்பு என 
வெண்ணையாய்   வழுக்கும் தோல் பெட்டியும் உண்டு

 ஆனால் இப்பொழுது தேவை 
ஒரு அகன்ற   அழுத்தமான பெட்டி
சக்கரங்கள்  போக இறக்கைகளும் தேவைப் படலாம்
போகும் இடம் அப்படி

பொருட்கள் நிறைய சேர்ந்துவிட்டன 
விட்டுச் செல்ல மனமில்லை
வந்தவை சேர்த்தவை எடுத்துக்கொண்டவை என 
பல விதமான  பொருட்கள் 

இடமிருந்தால் சில நினைவுகள் 
ஆனால் அவற்றால் என்ன பலன் 

இங்கே அலுத்து  வி ட்டது 
இனி எடுப்பதற்கில்லை

எங்கே கிடைக்கும் பெட்டி சொல்லுங்கள் . . .

Wednesday, 8 February 2012


ஐந்து மணி நேரம் மின்சாரமின்றி 
பதறி பதறி பணிகளை முடிக்க
சபித்துக்கொண்டே பழகிக்கொள்கிறோம்

இணைத்து வைக்கும் இளங்கரங்கள்
உருவிக்கொள்ளும் வேகம் பார்த்து
பெற்றோர் அதிரும் கோலம் பார்க்கிறோம்
ஏற்றுக்கொள்கிறோம் 

காலையில் தோல்பை தோளில் துவள
நான்கு மணித்துளிகளில் தலைநகர் சென்று 
வேலையை முடித்து  அன்றிரவே மீள
வான ஊர்தி வழி செய்கிறது
ஆச்சரியமில்லை 

உற்றார் உறவினர் உடைமையைப் பறித்து 
தலையணை உறையில் காசினைப் பதுக்கும்
நீசத்தனமும் நடக்கவே செய்கிறது 

இன்று 
சலனமற்ற அன்பே அதிசயம்

பெற்றோர் போற்றும் பெரியோர் மதிக்கும்
தான் எனும் போர்வையை உதிர்த்து விட்டு 
திடமாய் நிற்கும் இளைஞரே அதிசயம்