அறிவாயா சொல்
நாட்கள் நீள்கின்றன தேவையின்றி
தனிமையின் சாரம் ஊறி, அவை அர்த்தமற்று போனால்
அதற்கு நீயே பொறுப்பு
காலம் எனும் காற்றில் அவை
பொல பொலவென்று உதிர்ந்து, மக்கி மடிந்தால்
அதற்கும் நீயே பொறுப்பு
ஒவ்வொரு விடியலையும் விரைந்து ஏற்றுக் கொள்
அது உன் கடைசி விடியலாகவும் இருக்கலாம்
ஒவ்வொரு இரவும் நித்திரையை ஆரத்தழுவிக் கொள்
அது ஒரு பெருந்தூக்கத்திற்கு ஒத்திகையாக அமையலாம்
சிறு தூறல் மண்வாசமும் சிறகு விரிக்கும் பருந்தின் ஒய்யாரமும்
வெண் மொட்டு காளானின் எதிர்பாரா வரவும்
உள்மனதில் பொத்தி பதித்துக் கொள்
இவற்றை நீ இன்னொரு யுகத்தில் சந்திக்க நேரலாம்
யாருக்குத்தெரியும்
நீயும் நானும் கூட இதே வாழ்வை மறுபடி வாழநேரலாம்
நீ நன்கு அறிவாயா சொல்,
நிகழ், எதிர், கடந்த காலங்களின் வரிசை?